- நடிகர் : சிவகார்த்திகேயன்
- நடிகை : ஹன்சிகா மோத்வானி
- இயக்குனர் :திருக்குமரன்
கிட்டத்தட்ட 50 கோடிக்கு பிஸினஸ் ஆகியிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படம், ஏ.ஆர்.முருகதாஸின் கதை, அனிருத்தின் இசை, சிவகார்த்திக்கு ஹன்சிகா மோத்வானி ஜோடியான படம், ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான் மான் கராத்தே! இத்தனை பில்-டப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் இப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா? எனக் கேட்டால்., சண்டை போடாமல் சண்டையில் இருந்து தப்பிக்கும் உத்திதான் மான் கராத்தே எனும் பெயர் காரணம் என இப்படக்குழு சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது. கதையே இல்லாமல் அதை படமாகவும், எடுக்காமல், படம் எடுத்தது மாதிரி பாவ்லா பண்ணியிருக்கிறார்கள்... மான்கராத்தே குழுவினர் என்பது தான் இப்படத்தின் பலம்(?) பலவீனம்(!) இரண்டும்!!
ஒரு ஷாப்பிங் மாலில் நாயகி ஹன்சிகா மோத்வானி, இரண்டு கையிலும் ஆசை ஆசையாய் கோன் ஐஸை வாங்கிக் கொண்டு, ஷூ லேஸ் கழண்றதால் அதை எதிர்படும் சிவகார்த்தியிடம் கொடுத்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டு லேஸை கட்டுகிறார். அதற்குள் சிவகார்த்தி ஒரு கோனை சற்றே நக்கி சுவைக்க, அதில் கடுப்பாகும் ஹன்சிகா, இரண்டு கோன்களையும் புதிதாக வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிக்கிறார். சிவகார்த்தி, இருபது ரூபாய் காசில்லாததால் வாங்கித்தர மறுக்கிறார். இதில் சிவகார்த்தி மீது செம கடுப்பாகி கிளம்பி போகிறார் ஹன்சிகா. இவர்களது அடுத்த சந்திப்பும் அதே மாதிரி ஒரு மாலில் உள்ள லிப்டில், யாரோ ஒரு தடியன் போட்டுச் சென்ற கார்பன்-டை-ஆக்சைடு வெடிகுண்டினை, சிவகார்த்தி தான் ரிலீஸ் செய்ததாக கருதி, அவர் மீது ஹன்சிகா கடுப்பாகும் காட்சியில் தொடர்கிறது. இந்த இரண்டு சந்திப்புகளுக்கு பின் சிவகார்த்திக்கு, ஹன்சிகா மீது காதலோ காதல் அப்படி ஒரு காதல்!
கையில் இருபது ரூபாய் கூட இல்லாமல் அடுத்தவர் ஐஸ்கிரீமை நக்கும் ரகமான ராயபுரம் பீட்டர் எனும் சிவகார்த்தி மீது, அவர் வழக்கமான ஹீரோக்கள் செய்வது மாதிரி செய்யும் நாயகியின் வண்டி பஞ்சர் ஆன போது செய்யும் ஹெல்ப் உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி விஷயங்களுக்காக ஹன்சிகாவுக்கும், சிவகார்த்தி மீது காதல் வருகிறது.
வேலைவெட்டி இல்லாத சிவகார்த்தி, ஹன்சிகாவுக்காக நிறைய மாறுகிறார். கூடவே பெரிய குத்துச் சண்டை வீரராகவும் உருமாறுகிறார். அது எப்படி? ஏன்? எதற்கு.? என்பது தான் மான் கராத்தே காமெடியும், காதில் பூச்சுற்றலுமான மீதிக்கதை!
சென்னை, ராயபுரம் பீட்டராக சிவகார்த்தி, இன்னும் நிறைய பீட்டர் விட்டு, ஹன்சிகாவை கவுத்தி இருக்கலாம். அதை விடுத்து பாக்ஸர், அதுவும் மான் கராத்தே பாக்ஸர், அடி, உதை என ஆக்ஷ்னில் இறங்காமல் இறங்கி ரசிகர்களை கொல்லாமல் கொல்வது சற்றே உறுத்தல். பாக்ஸிங்கே தெரியாமல் பைனல் போட்டி வரை சிவகார்த்தி வந்துவிட்டு, பைனலில் கில்லர் பீட்டருடன் மோத பயப்பட்டு காதலிக்காக இந்த போட்டியில் விட்டுத்தர சொல்லி கெஞ்சுவதும், அவர், இவரது ஹன்சிகாவை விட்டுத்தரச் சொல்லி மிஞ்சுவதும் கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர்!
சிவகார்த்தியை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக கில்லர்-பீட்டர் வம்சியை கெட்டவனாக காட்டியிருப்பது கொடுமை! ஆக்ஷ்ன் காட்சிகளில் சிவகார்த்தி அப்படி இப்படி இருந்தாலும் பிரண்ட்ஸ் சென்டிமெண்ட், ஹன்சிகாவுடனான ரொமான்ஸ் உள்ளிட்ட விஷயங்களிலும், டான்ஸிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். அதேநேரம் 40 பவுண்சர்களை (என்னதான் புரடியூசர் செலவு என்றாலும்...) விழா வேத்திகளுக்கு அழைத்து வருவதை விடுத்து சிவகார்த்தி, நல்லதாய் 4-5 கதை கேட்பாளர்களை தன் கூட வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது!
ஹன்சிகா வழக்கம் போலவே செமக்யூட், அவருக்கு சிவகார்த்தி மீது காதல் வருவதற்கான காரணங்கள் தான் புரியாத புதிர். காமெடி சதீஷ் அண்ட் கோவினர் சத்யம் கம்ப்யூட்டரில் வேலைபார்த்து கம்பெனி திவாலானாதும், ஒரு சித்தரின் ஜோசியம், ஹோசியத்தை நம்பி சிவகார்த்தியை பாக்ஸர் ஆக்க முயற்சிப்பதும், பின் பேக் அடிப்பதும் நம்பமுடியாத காமெடி!
மான் கராத்தேயின் பெரிய பலம் அனிருத்தின் இசையும், அழகிய பாடல்களும்தான். அதேமாதிரி எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் பெரும்பலம். இவை இரண்டுக்காவும் மான் கராத்தேவை பார்க்கலாம், ரசிக்கலாம்!
ஏ.ஆர்.முருகதாஸின் கதை எனப் போட்டுவிட்டு எந்த கதையும்ல, எள் அளவும் இல்லாமல் இருப்பது, கே.திருக்குமரனின் திரைக்கதை, இயக்கத்தில் த்ரிலிங்காக எதுவும் இல்லாமல் இருப்பது உள்ளிட் மைனஸ் பாயிண்ட்டுகளுடன், பத்து திருக்குறள் தெரியாத ஹீரோ, கரியமில வாய்வு காமெடி ரசனை என மான் கராத்தே பெரிதாய் மனதை கவரலை! ஆனாலும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை... என சொன்னதற்காக மான் கராத்தே - மனதை கவருதே!
0 comments:
Post a Comment